காஷ்மீரில் 4 பேர் சுட்டுக்கொலை.. குண்டுவெடிப்பில் குழந்தை பலி!
ரஜோரியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் எல்ஜி மனோஜ் சின்ஹா கண்டனம்
ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள அப்பர் டாங்ரி என்ற கிராமத்திற்குள் நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீரென புகுந்து பொதுமக்கள் மீதும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், துப்பாக்கிசூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 13க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 4 பேர் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரஜோரி அருகே அப்பர் டாங்கரி பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. அதாவது, ரஜோரியின் அப்பர் டாங்ரி கிராமத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவரின் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒரு குழந்தை பலியாகியுள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். உயிரிழந்த நபர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். ரஜோரியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார்