இது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது – அண்ணாமலை
இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள்.
சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.
மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய தமிழக முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.