தவறுதலாக வங்கியில் விழுந்த 1.28 கோடி! தரமறுத்த நபருக்கு சிறை.!
துபாயில் இந்தியர் ஒருவரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக விழுந்த ரூ.1.28 கோடியை திருப்பித்தர மறுத்தவருக்கு சிறை தண்டனை.
ஐக்கிய அரபு அமீரகத்தில், மருத்துவ வர்த்தக நிறுவனம் தவறுதலாக இந்தியர் ஒருவரின் வங்கிக்கணக்கில் அக்டோபர் 2021 இல் AED 570,000 திர்ஹம் (இந்திய மதிப்பில் ரூ.1.28 கோடி) அனுப்பியுள்ளது. இந்த பணத்தை திருப்பி தர மறுத்ததால் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
துபாய் குற்றவியல் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பின்படி, அடையாளம் தெரியாத அந்த நபர், அதே தொகையை அபராதமாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார், மேலும் தண்டனையின் முடிவில் நாடு கடத்தப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றம் சாட்டப்பட்டவர் இது குறித்து கூறியதாவது, எனது வங்கிக் கணக்கில் 570,000 திர்ஹம் டெபாசிட் செய்யப்பட்டபோது நான் ஆச்சரியப்பட்டேன். எனது வாடகை மற்றும் செலவுகளை நான் இதிலிருந்து செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.
தவறுதலாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதை அறிந்திருந்தும், குற்றம் சாட்டப்பட்டவர் பணத்தை வங்கிக்குத் திருப்பித் தர மறுத்துவிட்டார். ஒரு நிறுவனம் என்னிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டது, ஆனால் பணம் அவர்களுக்குச் சொந்தமானதா என்று எனக்குத் தெரியாததால் நான் மறுத்துவிட்டேன். அவர்கள் என்னிடம் பலமுறை கேட்டார்கள், என்று அவர் நீதிமன்றத்தில் கூறியதாக தகவல் வெளியானது.