எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு..!
பல்வேறு மாநிலங்களில் 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் கைரானா, மராட்டிய மாநிலம் பல்கார், பண்டாரா–கோண்டியா, நாகாலாந்து மாநிலம் நாகாலாந்து ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.பா.ஜனதா எம்.பி. ஹுக்கும் சிங் உயிரிழந்ததால் கைரானா தொகுதியிலும், நாகாலாந்து மாநில முதல்–மந்திரியாக பொறுப்பேற்ற நிபியு ரியோ ராஜினாமா செய்ததால் நாகாலாந்து தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது.
இதுபோல், உத்தரபிரதேச மாநிலம் நூர்புர், மராட்டிய மாநிலம் பாலஸ் கடேகோன், பஞ்சாப் மாநிலம் ஷாகோட், பீகார் மாநிலம் ஜோகிகட், ஜார்கண்ட் மாநிலம் கோமியா, சில்லி, கேரள மாநிலம் செங்கானூர், மேகாலயா மாநிலம் அம்பாதி, உத்தரகாண்ட் மாநிலம் தாராளி, மேற்கு வங்காள மாநிலம் மகேஷ்தலா ஆகிய 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.மேற்கண்ட அனைத்து தொகுதிகளிலும் 31–ந் தேதி (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இடைத்தேர்தல் நடைபெற்ற பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
கைரானா மற்றும் நுர்பூர் ஆகிய தொகுதிகளில் அதிக இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த இரு தொகுதிகளிலும், மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்பிஎன் சிங், சமாஜ்வாடி கட்சித்தலைவர்களில் ஒருவரான ராம்கோபால் யாதவ், ஆர்.எல்.டி கட்சி தலைவர் அஜித் சிங் ஆகியோர் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து, இந்த விவகாரம் குறித்து பேசினர்.
அப்போது, வாக்குப்பதிவு எந்திரங்களின் கோளாறால், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே, அதிக வெப்பம் காரணமாக வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இடைத்தேர்தலின் போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரம் மாநிலங்களில் 25 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்கள் முறையாக செயல்படவில்லை என்றும், பாஜகவின் திட்டமிட்ட செயலே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதான இடங்களில் உடனடியாக அவை சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இதுதொடர்பான எதிர்க்கட்சிகளின்குற்றச்சாட்டுகள் மிகையானவை என்றும் கூறியுள்ளது