மணல் கடத்தி வந்த லாரி பிடிபட்டது..,
கருங்கல்:போலீசார் நேற்று காலை குமரி மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் தனிப்படை கருங்கல் கருமாவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனையிட முயன்றனர். உடனடியாக லாரியில் இருந்து டிரைவர், கிளீனர் இருவரும் இறங்கி தப்பியோட முயன்றனர். தனிப்படையினர் 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.
லாரியில், ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. ஆவணங்களை சோதனையிட்ட போது திருச்சி மாவட்ட அரசு குவாரியில் இருந்து வழங்கப்பட்ட அனுமதி சீட்டு போன்று போலியான பாஸ் தயாரிக்கப்பட்டதும், வெறு எங்கிருந்தோ ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணலை அள்ளி வருவதும் தெரியவந்தது. ஆனால் குமரி மாவட்ட எல்லையில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் வடக்கன்குளத்தில் இருந்து பாறைப்பொடி ஏற்றி வருவது போன்று மற்றொரு டிரிப் ஷீட் பதிவு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே வாகனத்தில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் வெவ்வெறு கனிம வளங்கள் ஏற்றி வருவது போன்று டிரிப் ஷீட் தயாரிக்கப்பட்டிருந்தது தனிப்படையினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, கருங்கல் காவல் நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.