சென்னை காவல் உதவி ஆணையர் குற்றவழக்கில் சிக்கியவரிடம் லஞ்சம் கேட்பு?
இணையதளத்தில் சென்னை தேனாம்பேட்டை உதவி ஆணையர் முத்தழகு குற்றவழக்கில் சிக்கியவரிடம் லஞ்சம் கேட்டது என்று கூறி வெளியிடப்பட்ட ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் வாரிசான கார்த்திக் சேதுபதி கடத்தப்பட்டு சொத்து அபகரிக்கப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள் பிரகாஷ், ராஜா சுந்தர் மற்றும் சுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்கள் மீது குண்டர் சட்டத்திலும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கார்த்திக் சேதுபதி கடத்தல் வழக்கில், ராஜா சுந்தர், பிரகாஷ் மற்றும் சுந்தர் ஆகியோரை கைது செய்யாமல் இருக்க சென்னை தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் முத்தழகு லஞ்சம் கேட்டு பேரம் பேசிய போது பதிவு செய்யப்பட்டது என்று கூறி ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஆடியோ குறித்து தேனாம்பேட்டை உதவி ஆணையர் முத்தழகுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, சுந்தர், ராஜாசுந்தர், பிரகாஷ் ஆகியோரை துணிச்சலாக கைது செய்ததால் தனக்கு எதிராக அவர்கள் அவதூறு பரப்புவதாக முத்தழகு கூறியுள்ளார். அந்த ஆடியோவில் இருப்பது ராக்கெட் ராஜாவின் கூட்டாளி சுந்தர் குரல் தான் என்றும் ஆனால் மற்றொரு குரல் தன்னுடையது இல்லை என்றும் உதவி ஆணையர் முத்தழகு தெரிவித்துள்ளார்.
தன்னால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் தன்னை பழிவாங்க பொய்யான ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது குடும்பத்தினரை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், தனது காரில் பணத்தை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்க வைக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அவற்றை எல்லாம் மீறி துணிச்சலாக அவர்களை கைது செய்ததாகவும் உதவி ஆணையர் முத்தழகு கூறியுள்ளார். அதே சமயம், இந்த ஆடியோ குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.