#Breaking : எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்.? வரவு செலவு கணக்குகள் பதிவேற்றம்.!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வரவு செலவு மனு இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கட்சிகள் தங்கள் கட்சியின் வரவு – செலவு செயல்பாடுகளை தாக்கல் செய்வது போல, கடந்த 2021 -2022ஆம் ஆண்டு அதிமுக கட்சி செய்த வரவு செலவுகளை கட்சி இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு தாக்கல் செய்து இருந்தார்.
அதிமுக கட்சி பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இந்த வருமான வரி, வரவு செலவு கணக்குகள் ஏற்றுக்கொள்ளப்படுமா என கேள்வி நிலவியது.
26 பக்கங்கள் கொண்ட இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பெயரில் வரவு செலவு, வருமான வரி தாக்கல் செய்யப்பட்டு 26 பக்கங்கள் கொண்ட இந்த கடிதம் கடந்த செப்டம்பரில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டு, அக்டோபரில் இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தற்போது இந்த மனு இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அதிமுக வழக்கு நடைபெறும் உச்சநீதிமன்றத்தில் பிரதிபலிப்பை ஏற்படுத்துமா என்பதை தமிழக அரசியல் வட்டாரம் உற்றுநோக்கி பார்க்கிறது.