இந்தியாவிற்கெதிரான தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி.!
இந்தியாவிற்கெதிரான 5-வது டி-20 போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. நேற்று மும்பையில் நடந்த 5 ஆவது டி-20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஆஷ்லி கார்ட்னர் 66* ரன்கள் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் 64* ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் தேவிகா வைத்யா, ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, மற்றும் அஞ்சலி சர்வாணி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
197 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தீப்தி சர்மா 53 ரன்கள் மற்றும் ஹர்லீன் தியோல் 24 ரன்களும் குவித்தனர். இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
ஏற்கனவே தொடரை வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி, 5-வது போட்டியிலும் வென்றதால் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஷ்லி கார்ட்னர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.