படிப்படியாக என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!வைகோ

Default Image

மத்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி வெட்டி எடுக்கும் நிறுவனமான என்எல்சி கடலூர் மாவட்டம் நெய்வேலியில்  இயங்கி வருகிறது. இங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நாட்களை நிர்வாகம் குறைத்து வருவதாக குற்றம் சாட்டியும், பணியிட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று (திங்கள்கிழமை) போராட்டம் நடத்தினர்.

சுரங்கம் 1-ஏ முன்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அவர்களது கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் என்எல்சி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “என்எல்சி தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது. சுரங்க விரிவாக்கத் திட்டங்களுக்கு வீடு மற்றும் நிலங்களைத் தாரை வார்த்துக் கொடுத்த 13,000 பேர், நிரந்தரப் பணி வாய்ப்பு இன்றி ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அவர்களுள், முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 40 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதுடன், வேலை நாட்களையும் பாதியாக என்எல்சி நிர்வாகம் குறைத்தது. ஏற்கெனவே மிகக் குறைந்த ஊதியத்தில் வாழ்வாதாரத்திற்கு திண்டாடி வரும் நிலையில், இப்போது வேலை நாட்களையும் பாதியாகக் குறைத்ததால், அத்தொழிலாளர்களின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

தங்களுக்கு முழு பணி நாள் அளிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே பணியாற்றிய முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியமர்த்த வேண்டும் என்றும் பல கட்டங்களாக அறவழியில் போராடி வந்தனர்.

அவர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்காததால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 25 பேர் இன்று முதல் சுரங்க விரிவாக்க நுழைவாயிலில் விஷம் அருந்தி உள்ளனர். அதில் 2 தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. 25 தொழிலாளர்களையும் காப்பாற்றுவதற்கு உயர்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஏதேனும் உயிரிழப்புகள் நேர்ந்தால், அதற்கு மத்திய, மாநில அரசுகளும், நெய்வேலி நிலக்கரி நிர்வாகமும், காவல்துறையும்தான் பொறுப்பு ஆகும்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வீடு, நிலங்களைக் கொடுத்துவிட்டு, வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, சட்டப்படியும், நியாயப்படியும் உரிமைகள் அளிக்கப்பட வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்