#BREAKING: புலம்பெயர் தமிழர் நலவாரியத்துக்கு தலைவர் நியமனம் – முதல்வர் உத்தரவு!
புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவராக கார்த்திகேய சிவசேனாபதியை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவு.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண புலம்பெயர் தமிழர் நல வாரியம் – தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவராக கார்த்திகேய சிவசேனாபதியை நியமனம் செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர் நல வாரிய அரசு சாரா உறுப்பினர்களாக 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், மொரிஷியசில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன் அரசு சாரா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிமாநிலம், வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை சேகரித்து தரவு தளம் ஏற்படுத்தப்படும். வாரியத்தில் பதிவு செய்தோருக்கு விபத்து, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்.
மேலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் பணியின்போது இறந்தால் அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி, திருமணம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.3 கோடி ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.