தாய்லாந்து போர்க்கப்பல் நீரில் மூழ்கியது.! 31 கடற்படையினரை காணவில்லை… மீட்பு பணி தீவிரம்.!
தாய்லாந்து போர்க்கப்பல் மூழ்கியதில் 31 கடற்படையினரை தேடும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தாய்லாந்து கடற்படையின் போர்க்கப்பல், நேற்று நள்ளிரவில் இயந்திரக் கோளாறு காரணமாக, தாய்லாந்து வளைகுடா பகுதியில் மூழ்கியுள்ளது. இதனால் மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணியின் மூலம், போர்க்கப்பலில் இருந்த 106 பேரில் 75 பேரை மீட்புக்குழுவினர் காப்பாற்றியதாக தாய்லாந்து நாட்டின் ராயல் தாய் கடற்படை தெரிவித்துள்ளது.
இன்னும் 31 பேரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை எனவும் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலில் அலைகள் உயரமாகவும் அதிகமாகவும் அடித்து வருவதாலும், காற்றின் வேகத்தாலும் மீட்புக்குழுவினரின் சிறிய படகுகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதால், ஹெலிகாப்டரின் உதவியுடன் 16 கி.மீ சுற்றளவில் தொடர்ந்து மீட்புப்பணி நடைபெறுவதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்தது.
வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடும்போது என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தண்ணீர் கப்பலுக்குள் புகுந்து மூழ்கடித்ததாக கூறப்படுகிறது.