ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்கள்! ஒப்புக்கொண்ட ஆப்பிள்.!
ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
உலகின் முன்னணி மொபைல் உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம், உலகம் முழுவதும் தனது மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் எப்போதும் தனது ஹார்ட்வேர் தகவல்கள் குறித்து ரகசியம் காத்துவரும் நிலையில் தற்போது ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்து ஆப்பிள் நிறுவன சிஇஓ(CEO) டிம் குக் தனது ட்விட்டரில், உலகின் முன்னணி கேமரா சென்சார்களை ஐபோன்களில் பயன்படுத்தி உருவாக்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளாக ஆப்பிள் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தனக்கு ஜப்பானின் குமாமோட்டோவில் உள்ள இந்த அதிநவீன வசதியை காட்டியதற்காக சோனியின் தலைமை நிர்வாக அதிகாரி கெனிச்சிரோ யோஷிடா, கென் மற்றும் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி என டிம் குக் மேலும் தெரிவித்தார்.
ஆப்பிளை சுற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த ரகசியத்தை வெளியில் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். மேலும் சோனி குழுவினருடன் சேர்ந்து அவர் ஸ்மார்ட்போனைப் பார்க்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
ஆப்பிள் மற்றும் சோனி நிறுவனம் சேர்ந்து, ஐபோன் தொடரில் புதிதாக வரவிருக்கும் புதிய மாடல்களிலும் சோனியின் சென்சார்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.