INDvsBAN TESTSERIES: இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்.!
இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடர் நாளை வங்கதேசத்தின் சட்டோகிராமில் தொடங்குகிறது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடக்கும் டெஸ்ட் தொடர் நாளை காலை சட்டோகிராமில் தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்தியா 52.08% உடன் 4-வது இடத்தில் இருக்கிறது. முதலிரண்டு இடங்கள் முறையே ஆஸ்திரேலியா(75%) மற்றும் தென்னாபிரிக்கா(60%) வகிக்கின்றன. 2023 ஆம் ஆண்டில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா தகுதி பெற மீதமுள்ள 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
ஒருவேளை இந்தியா மீதமுள்ள 6 போட்டிகளில் ஒன்றில் தோற்றாலும் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்கவேண்டும். இந்த நிலையில் இந்தியா, வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டியிலும் வெல்ல உறுதியாக இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் இந்திய கேப்டன் ராகுல் இது குறித்து கூறும்போது, இந்தியா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த இருக்கிறது என்று கூறினார்.
வங்கதேச அணியைப் பொறுத்தவரை சகிப் அல்ஹசன் முதல் டெஸ்டில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. மேலும் டஸ்கின் அஹ்மது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, முதுகு வலி காரணமாக அவருக்கு முதல் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்று பயிற்சியாளர் ரசல் டொமிங்கோ தெரிவித்தார்.
இந்திய அணி: கே.எல். ராகுல் (C), ரிஷப் பந்த் (WK), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஸ்ரீகர் பாரத், ஜெய்தேவ் உனத்கட் , நவ்தீப் சைனி, அபிமன்யு ஈஸ்வரன், சௌரப் குமார்
வங்கதேச அணி: ஷாகிப் அல் ஹசன் (C), முஷ்பிகுர் ரஹீம் (WK), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மஹ்முதுல் ஹசன் ஜாய், மொமினுல் ஹக், அனாமுல் ஹக், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், எபடோட் ஹொசைன், கலீத் அஹ்மத், ஷோரிஃபுல் இஸ்லாம், ஷோரிபுல் அகமது, நூருல் ஹசன், யாசிர் அலி, ஜாகிர் ஹசன், ரெஜவுர் ரஹ்மான் ராஜா