வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழனியில் குவிந்த பக்தர்கள்..!!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலங்கள் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். அதிலும் விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள்.
அந்த வகையில் விடுமுறை தினம் மற்றும் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை இருந்ததால் படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பக்தர்கள் வருகை அதிகரித்ததால் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாமி தரிசனம் செய்தவர்கள் மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்காருக்காக காத்திருக்காமல் படிப்பாதை வழியாக இறங்கிச்செல்லவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.