அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது.
இதில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தனர். இந்த பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, ஜூலை 11-ம் தேதி இபிஎஸ் அணியினர் நடத்திய பொதுக்குழு செல்லாது என நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த நிலையில், இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதுபோன்று இருதரப்புக்கு மாறி, மாறி தீர்ப்பு வந்ததால் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இபிஎஸ்-க்கு சாதகமாக வந்த இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
இபிஎஸ் தரப்பும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த தடையையும் உச்சநீதிமன்றம் நீட்டித்து, இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.