இது தமிழக அரசுக்கு பெருமை சேர்க்காது! சத்துணவு மையங்களை மூட வேண்டாம் – அன்புமணி ராமதாஸ்

Default Image

சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.

தமிழ்நாட்டில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்ட சீரமைப்பு என்ற பெயரில் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

சத்துணவு திட்டத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சத்துணவு மையங்களை மூடுவதோ அல்லது ஒருங்கிணைப்பதோ சத்துணவுத் திட்டத்தை வலுவிழக்கவே செய்யும். தமிழக அரசின் சமூக நலத்துறை இணை இயக்குனர் நேற்று முன்நாள் சென்னையில் சத்துணவுத் திட்ட அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் நடத்திய கலந்தாய்வில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் தான் சத்துணவு மையங்கள் மூடப்படுமோ? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள், ஒரு குறிப்பிட்ட சத்துணவு மையத்திலிருந்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள சத்துணவு மையங்கள் ஆகியவற்றின் விவரங்களை வரைபடங்களுடன் திரட்ட வேண்டும் ஆணையிட்டுள்ளதாக தகவல் வருகிறது. மையங்களை கணக்கெடுக்கும் நோக்கம், சத்துணவை ஏதேனும் ஓரிடத்தில் இருந்து தயாரித்து வழங்குவதாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த திட்டம் தமிழகத்தின் அடையாளமாக திகழும் சத்துணவு திட்டத்தை வலுவிழக்க செய்யும், அதன் நோக்கத்தை சிதைத்துவிடும். மாணவர்களுக்கு சூடான உணவை சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்கவே பள்ளி வளாகத்தில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் உணவு சமைத்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் போது உணவு ஆறவிடும்.

தமிழ்நாடு முழுவதும் 43,190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 1.29 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சுமார் 28,000 சத்துணவு மையங்களை மூட வேண்டிய நிலை உருவாகும். அதனால், சுமார் 85,000 பணியிடங்கள் ரத்து செய்யப்படும். இது மோசமான பணியாளர் விரோத நடவடிக்கையாகவே அமையும்.

ஒருபுறம், காலியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை சத்துணவு பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மற்றொருபுறம் தமிழகத்தில் 1,545 தொடக்கப்பள்ளிகளில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை இன்னும் விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய சமூக நலத்துறை, அதை விடுத்து சத்துணவு மையங்களை மூடுவதற்கான திட்டங்களை வகுப்பது தமிழக அரசுக்கு பெருமை சேர்க்காது. எனவே, சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அதை சமூகநலத்துறை கைவிட வேண்டும். சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்றும் காலை உணவுத் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்