கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு..!-எடியூரப்பா அறிவிப்பு..!
விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி திட்டமிட்டபடி, பாஜ சார்பில் நாளை பந்த் நடத்தப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக, மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது விவசாய கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை என குமாரசாமி தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து, 28ம் தேதி (நாளை) மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என கூறியிருந்தார்.
தேர்தல் ரத்து செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் நாளை தேர்தல் நடப்பதால், பந்த் நடைபெறாது என தகவல் வெளியாகின. இதை மறுத்துள்ள எடியூரப்பா, திட்டமிட்டபடி நாளை பந்த் நடைபெறும் என தெரிவித்தார். இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில், ‘‘விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக தேர்தலின்போது குமாரசாமி வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் பதவிக்கு வந்ததும் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். விவசாய கடன் தள்ளுபடி செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம். இந்த பந்த்தில் பாஜவினர் மட்டுமின்றி விவசாயிகளும் அதிகளவில் கலந்து கொள்வார்கள்.
விவசாயிகளுக்கு நாங்கள் எப்போது உறுதுணையாக இருப்போம். ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் நாளை தேர்தல் நடக்கிறது. எனவே, பெங்களூருவை தவிர்த்து மாநிலம் முழுவதும் திட்டமிட்டபடி நாளை பந்த் நடைபெறும். ராஜ ராஜேஸ்வரி நகரில் பாஜ வெற்றிபெறும்’’ என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்