சென்னை மெட்ரோ பணியில் திடீர் விபத்து.! சேதமடைந்த அரசு மாநகர பேருந்து.!
வடபழனியில் இன்று அதிகாலை சென்னை மெட்ரோ பணிகள் நடைபெற்று இருந்த போது அந்த வழியாக வந்த சென்னை மாநகர பேருந்தின் மீது கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது.
இன்று அதிகாலை 5 மணியளவில் சென்னை, வடபழனி பணிமனையில் இருந்து 159ஏ என்ற சென்னை மாநகர் பேருந்து புறப்பட்டு சென்றது. பணிமனையில் இருந்து புறப்பட்டதால் பயணிகள் யாரும் பேருந்தில் இல்லை.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. வடபழனி அருகேயும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது அந்த வழியாக மேற்கண்ட அரசு பேருந்து வரும்போது, மெட்ரோ பணியில் ஈடுபட்டு இருந்த கிரேன் இடித்து மாநகர பேருந்து பலத்த சேதமடைந்துவிட்டது.
நல்லவேளையாக பயணிகள் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் பேருந்து ஓட்டுநர் பழனி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சென்னை வடபழனி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.