திமுகவால் தான் போதைப் பழக்கம் அதிகரிப்பு – மாநில தலைவர் அண்ணாமலை
அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என அண்ணாமலை ட்வீட்.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விநியோகம் மற்றும் கடத்துபர்களை கண்டறிந்து காவல்துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
போதைப்பொருட்கள் விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தும், வங்கி கணக்குகளை முடக்கியும், போதைப்பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகரித்து உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றசாட்டி வருகிறது.
அந்தவகையில், தற்போது திமுகவால் தான் போதைப் பழக்கம் அதிகரித்து உள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், திறனற்ற திமுக ஆட்சியில் பொதுமக்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிக்க காரணம் அதன் புழக்கத்திற்கு திமுகவினரே உதவுவதால் தான்.
மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு. அடுத்த முறை போதைப் பொருட்களின் ஒழிப்பைப் பற்றி தமிழக அரசு பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்த முயற்சி செய்தபோது சிக்கிய தன் கட்சிக்காரரைக் குறிப்பிடுவார் என்று நம்புவோம் என தெரிவித்துள்ளார்.