இவர்களுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! – மநீம
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிக்காலுக்கான சிறப்பு பாதை திறக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தூரத்து கனவாகயிருந்தவொன்று, அலைகள் வந்து மோதிச்செல்லும் சென்னை கடற்கரையை அருகில் சென்று பார்ப்பது. சாலைக்கும், கடற்கரைக்கும் இடைப்பட்ட மணற்பரப்பு மிக நீளமாக இருந்ததால், மாற்றுத்திறனாளிகள் கடல் அருகில் சென்று கண்டு மகிழ முடியாமல் தூரத்திலிருந்து ஏக்கத்தோடு பார்த்து செல்லும் காட்சிகளை பலகாலமாக மெரினா கடற்கரையில் நாம் அடிக்கடி கண்டிருக்கிறோம்.
அதற்கொரு விடிவை, மாற்றுத்திறனாளிகளும் கடலின் அருகில் வந்து கண் நனைய கடலைப்பார்த்துச்செல்லும் வாய்ப்பை இப்போது பெற்றுள்ளனர். சாலையிலிருந்து கடல்வரை அவர்கள் செல்ல பாதை அமைத்துக்கொடுத்த தமிழக அரசிற்கு, நல்லதை யார் செய்தாலும் பாராட்டும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகவும், தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே நேரத்தில் அந்தப் பாதையை மாற்றுத்திறனாளிகளும், அவர்களுக்கு உதவியாக வருபவர்கள் மட்டுமே பயன்படுத்தவும், மற்றவர்கள் செல்வதை தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சிறந்த நோக்கத்தோடு போடப்பட்ட அந்தப்பாதை பழுதடைந்து விடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு எப்போதும் அப்பாதை பயன்பாட்டில் இருக்க, அதை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை பொதுமக்களும் உணர்ந்து அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.