பணியாளர் பற்றாகுறையால் கால்நடை பராமரிப்புத்துறை தள்ளாடுகிறது – எடப்பாடி பழனிசாமி

Default Image

தமிழகத்தில் கால்நடைகளுக்கு மருந்து தட்டுப்பாடு என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார்.

இந்த விடியா திமுக ஆட்சியில் கால்நடைகளுக்கும் மருந்து தட்டுப்பாடு, உடனடியாக நோய்த் தடுப்பூசிகளை வாங்கி, கால்நடைகளைக் காத்திட வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்குள்ள வலி, வேதனைகளை வாய் திறந்து சொல்ல முடியாத அப்பாவி கால்நடைகளின் துயரங்களைக் கண்டறிந்து, அவைகளின் துயர் துடைக்கும் கடவுள்களாக கால்நடை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றுகிறார்கள். கடந்த 18 மாத கால விடியா திமுக ஆட்சியில், இந்தத் துறை பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது.

2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை, அம்மா ஆட்சியின்போது கால்நடைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்ட ஒருசில முக்கிய திட்டங்களையும் எடுத்துரைத்துள்ளார். அம்மா அரசின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இன்று இத்துறை, பணியாளர் பற்றாக்குறையால் தள்ளாடுகிறது. முறையான நியமனங்கள் நடைபெறவில்லை என்று புகார்கள் வருகின்றன.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப கால்நடைகளுக்கும், கோழிகளுக்கும் மருத்துவ / விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு தேவையான தடுப்பு மருந்துகள் போடப்படும். கால்நடைகளுக்கான மருந்துப் பொருட்களும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலம் மொத்தமாக வாங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பப்படும்.

ஆனால், இதுவரை தடுப்பு மருந்துகள் வாங்கவில்லை. குறிப்பாக மாடுகளுக்கு வேண்டிய மருந்துகளை இதுவரை வாங்காததினால் இந்தாண்டு தமிழகம் முழுவதும் மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படவில்லை என்றும் இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் மாடுகளுக்கு நாக்கிலும், வாயிலும் அம்மை நோய் தாக்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்போது, கால்நடை மருத்துவர்கள் மாடுகளுக்குப் போடவேண்டிய தடுப்பு மருந்து இதுவரை அரசால் வழங்கப்படவில்லை என்றும், ஆடுகளுக்குப் போடவேண்டிய தடுப்பு மருந்து மட்டும் உள்ளதாகவும், எனவே, அத்தடுப்பு மருந்தையே மாடுகளுக்குச் செலுத்தி வருகின்றனர். ஆறறிவு உள்ளவர்கள் மட்டுமல்ல, ஐந்தறிவுள்ள கால்நடைகளின் வயிற்றிலும் அடிப்போம் என்ற குறிக்கோளோடு இந்த விடியா அரசின் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், மனிதர்களுக்கும் மருந்துகள் கொள்முதல் செய்வதில்லை, கால்நடைகளுக்கும் கொள்முதல் செய்வதில்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதுபோன்று நாட்டின மாடுகள் இனப் பெருக்கத்திற்கான ஆய்வுகளையும், மாட்டுப் பண்ணையைத் தொடர்ந்து நடத்திடவும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். எனவே, இந்த விடியா திமுக அரசு இனியாவது விழித்துக்கொண்டு கால்நடைகளுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை உடனடியாக கால்நடைகளுக்குப் போடவேண்டும்.

தலைவாசல் கால்நடைப் பூங்காவில் சுற்றுச்சூழலுக்கும், நீர்நிலைகளுக்கும் ஆபத்தை உண்டாக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலை ஆரம்பிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும். சிவகங்கை, செட்டிநாடு கால்நடைப் பண்ணையில் மீண்டும் முழு அளவில் பாரம்பரிய கால்நடைகளைக் காக்கும் வகையில் அதிகளவு நாட்டின கால்நடைகளை வளர்க்க வேண்டும் என்றும் இந்த விடியா அரசை கடுமையாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்