தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வு.!
இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வு. இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிப்பூர்வ பதிவைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் உணர்ச்சிகர பதிவைப் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமான தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி-20 களில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் இல் பெங்களூரு அணிக்காக கடந்த சீசனில் சிறப்பாக விளையாடி தொடர்ச்சியாக ரன்கள் குவித்தார். பெங்களூரு அணியில் கடைசி கட்டத்தில் தேவையான ரன்களை அதிரடியாக அடித்து (பினிஷர்), இந்திய அணி தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்த்தார். இதன் மூலம் டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
உலகக்கோப்பையில் இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று தொடரை விட்டு வெளிறியது. உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்ற இந்திய டி-20 அணியில் தினேஷ் கார்த்திக், இடம்பெற வில்லை.
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக், தனது சமூக ஊடகத்தில் உணர்ச்சிகரப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணி சார்பாக விளையாட வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறி விட்டது,தனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தொடரில் நாம் கோப்பையை வெல்ல தவறி விட்டோம், எனினும் எனக்கு நிறைய நல்ல நினைவுகளை கொடுத்திருக்கிறது.
மேலும் எனது நண்பர்கள், பயிற்சியாளர்கள், அணி வீரர்கள், முக்கியமாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த பதிவில் அவர் கூறியிருந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வு பெறப்போவதற்கு அடையாளமாக இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார்.