அகமதாபாத்-சென்னை நவஜீவன் விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து.!
அகமதாபாத்-சென்னை நவஜீவன் விரைவு ரயிலின் சரக்குகள் வைக்கும் பெட்டியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கூடூர் ரயில் சந்திப்பு அருகே இன்று அதிகாலையில், அகமதாபாத்-சென்னை நவஜீவன் விரைவு ரயிலின் சரக்குகள் வைக்கும் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவித்தன.
ரயிலின் சரக்கு அறை பெட்டியில், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சூடுபடுத்தும் கருவி (ஹீட்டர்) ஒன்று, அணைக்கப்படாததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 3 மணியளவில், ரயில் கூடூரை நெருங்கும் போது, சரக்கு அறை பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதை கவனித்த ரயில்வே ஊழியர், எச்சரிக்கை ஒலி எழுப்பினார். உடனடியாக ரயில், கூடூர் சந்திப்பில் நிறுத்தப்பட்டது.
மூன்று ஜன்னல்கள் உடைந்து புகையை வெளியேற்றினாலும், சரக்கறையில் உள்ள தானியங்கி தீ அணைக்கும் அமைப்பு செயல்படுத்தப்பட்டது. ஏசி சப்ளையும் துண்டிக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டது” என்று தெற்கு மத்திய ரயில்வே விஜயவாடா பிரிவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பிறகு தீயணைக்கப்பட்டு ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.