உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கிறது.! – பிரதமர் மோடி பெருமிதம்.!
உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. – பிரதமர் மோடி உரை.
இந்தோனேசியாவிலுள்ள பாலியில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார்.
ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளைச்சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டின் கருவாக “ஒன்றாக மீட்போம், வலுவாக மீட்போம்” என்ற கருப்பொருளின் கீழ் உலகளாவிய அளவில் முக்கிய பிரச்சினைகள் குறித்து உலகத்தலைவர்கள் பேச உள்ளனர்.
இதில் இந்தியா சார்பாக பிரதமர் மோடி, ‘ 2030ஆம் ஆண்டிற்குள் மின்சாரத்தில் பாதிக்கு மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும். எரிபொருள், எரிசக்திகளுக்கு தேவையான நிதி, தொழில்நுட்பங்களை வழங்க ஜி20 உச்சி மாநாடு நாடுகளின் ஒத்துழைப்பு மிக அவசியம்.’ என பேசினார்.
மேலும் குறிப்பிடுகையில், ‘ உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எரிபொருள் வினியோகத்தில் எந்த கட்டுப்பாடுகளையும் ஊக்குவிக்க கூடாது.’ எனவும் தனது ஜி20 மாநாட்டில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.