#T20 WorldCup2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி! ஹேல்ஸ், பட்லர் அதிரடியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!
டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு இன்று பலப்பரிட்சை நடத்தியது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் (5), ரோஹித் (27) என பெரிதாக ஸ்கோர் அடிக்க தவறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும்(14) சோபிக்கவில்லை. விராட் கோலி(50) மற்றும் ஹர்டிக் பாண்டியா(63) ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டியா 4 பௌண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களும், கோலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.
169 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடியுடன் விளையாட 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக விளையாடி 4 பௌண்டரி, 7 சிக்சருடன் 86 ரன்களும், ஜோஸ் பட்லர் 9 பௌண்டரி, 3 சிக்சருடன் 80 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். இதனால் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.