எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் குடும்பம் கிடையாது – ஈபிஎஸ்
ஸ்டாலின் எங்களைப் போன்று சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. அவர் தனது அப்பாவின் செல்வாக்கில் தான் முதல்வரானார் என ஈபிஎஸ் பேச்சு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக கொடியை ஏற்றி வைத்து பின் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் குடும்பம் கிடையாது. நம்மை தான் குடும்பமாக நினைத்தார்கள் அதனால் தான் நமக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்கள். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து கிளை செயலாளராக இருந்து தற்போது இந்த பொறுப்பிற்கு வந்துள்ளேன்.
அதிமுகவை வீழ்த்த வேண்டும் என சட்டமன்றத்தில் ஓபிஎஸ் வாக்களித்தார். பின் எப்படி அவர் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். இனிமேல் அதிமுகவில் ஓபிஎஸ்சை இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது. வாய்ப்பு கொடுக்கும் போதெல்லாம் ஓபிஎஸ் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் திமுகவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் ஸ்டாலின். ஆறு மாதத்திற்கு முன்பு சர்வாதிகாரியாக இருப்பேன் எனக் கூறியவர் தற்போது தூக்கமே போய்விட்டது என கூறுகிறார். ஸ்டாலின் எங்களைப் போன்று சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. அவர் தனது அப்பாவின் செல்வாக்கில் தான் முதல்வரானார். அதனால் தான் ஸ்டாலின் தற்போது பொம்மை போல் செயல்பட்டு வருகிறார். ஸ்டாலினால் கட்சியும் நடத்த முடியவில்லை, ஆட்சியும் நடத்த முடியவில்லை அதனால் தான் அவரை பொம்மை முதல்வர் என்று அழைக்கின்றனர் என விமர்சித்துள்ளார்.