#T20 WorldCup 2022: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி.!
டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்யாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து அணி மட்டும் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னியில் விளையாடுகின்றன. இலங்கை அணி அரையிறுதியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்றாலே அரையிறுதிக்கு முன்னேறும், தோற்றால் ஆஸ்திரேலிய அணி தகுதி பெறும்.
ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும், இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும் இருக்கிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணியில், முதலில் அதிரடியாக ஆடினாலும் பின்வரிசை வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய மார்க் வுட் அந்த ஓவரில் அவரது 2 விக்கெட்கள் மற்றும் ஒரு ரன் அவுட் என 3 விக்கெட்கள் விழுந்தது.
20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. அதிகபட்சமாக நிசாங்கா 67 ரன்களும், ராஜபக்சா 22 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
142 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பட்லர்(28) மற்றும் ஹேல்ஸ்(47) ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். அதன் பின் வந்த வீரர்கள் ஒற்றை இலக்குடன் அவுட் ஆக பென் ஸ்டோக்ஸ்(44) ஒருபக்கம் நிலைத்து நின்று ஆடி வெற்றிக்கு வித்திட்டார்.
இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணி சார்பில் ஹஸரங்கா, லஹிரு குமாரா மற்றும் டி சில்வா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.