இணைய சேவையின்றி ஸ்தம்பித்தது மூன்று மாவட்டங்கள்…!

Default Image

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் வன்முறை பரவாமல் தடுப்பதற்காக 27-ம் தேதி வரை இணையதள சேவையை நிறுத்தி வைக்க தமிழக அரசு  உத்தரவிட்டது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான, 4 கலந்தாய்வு உதவி மையங்களிலும் இணைய வசதி இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மற்றும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க + 2 மதிப்பெண் சான்றிதழை  பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதே போல் 10-ம் வகுப்பு தேர்வில் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க 26-ம் தேதி கடைசி தினம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 3 மாவட்டங்களில் உள்ள 10-ம் வகுப்பு எழுதிய மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி திரும்பிய பின், மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க மூன்று நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி நாள். இந்நிலையில் இணைய சேவை முடக்கத்தால் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு முறையிட்ட நிலையில், பொறியியல் படிப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மேலும்,  அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு, 25, 26, 28ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள், ஜூன் 5, 6 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகமும் இணைய சேவை முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி துறைமுகம் வழியாக மேற்கொள்ளப்படும் சர்வதேச ஏற்றுமதி, இறக்குமதி வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகள் பல கோடி ரூபாய் அளவிற்கு தேக்கமடைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர். எனவே இணைய சேவைமுடக்கத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்