தமிழ்நாட்டில் இந்தியை கொண்டாட நினைத்தால் அது முடியாது – சீமான்
நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் சொந்த மொழிக்கு உயிரானவர்கள் என சீமான் பேச்சு.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று சென்னை எழும்பூரில் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டமானது கொட்டும் மழையில் நடைபெற்றது. அந்த மழையிலும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அவர் நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் சொந்த மொழிக்கு உயிரானவர்கள். இந்தி மொழியை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறவில்லை. இந்தியை கட்டாயமாக திணிப்பது எதிர்த்து தான் போராட்டம் நடக்கிறது என விளக்கம் கொடுத்தார்.
அதை தொடர்ந்து, இந்தி திணிப்பு திட்டமிட்டு நடைபெறும் அரசியல் நாடகம் என குற்றம் சாட்டியுள்ளார் இந்தி தெரிந்த மாநிலங்களில் அந்த மொழியை கொண்டாட வேண்டும். ஆனால் தமிழகத்தில் இந்தியை கொண்டாட நினைத்தால் அது முடியாது என என்றும், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி இருக்கும் நிலையில் நாம் இப்போது அதற்காக தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.