தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் அண்ணன் – தம்பி மாதிரி – அமைச்சர் கே.என்.நேரு
அதிமுக இருக்கும் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக செயல்பட்டு வருகிறது என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், வரும் 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். சிறிய தவறுகளை கூட, பாஜக சேர்ந்தவர்கள் ஊதி பெரிதாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் திருச்சியில் தான் அனைத்து இடங்களையும் திமுக வென்றுள்ளது.
எதிர்க்கட்சி அதிமுக இன்றைக்கு பிளவுபட்டுள்ளது. ஆகையால் அதிமுக இருக்கும் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக செயல்பட்டு வருகிறது என்று விமர்சித்துள்ளார்.
திமுக தற்போது பலமாக உள்ளது. வருங்காலத்தில் திமுக இதைவிட பலமாக இருக்கும். வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள். தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் அண்ணன் – தம்பி மாதிரி. கடந்த காலங்களில் அ.தி.மு.க.,வுடனான போட்டி என்பது அண்ணன் – தம்பி போட்டியாக இருந்தது. ஆனால் தற்போது சகல அதிகாரங்களையும் வைத்திருப்பவர்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.