கோவைக்கு விரைந்தார் டிஜிபி சைலேந்திர பாபு.! காவல் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை.!
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முக்கிய காவல் அதிகாரிகளுடன் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
முபின் உடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் அடுத்தகட்ட விசாரணையை தேசிய புலனாய்வு முகாமையான என்ஐஏ மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் பரிந்துரை செய்து இருந்தார்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, கோவை கார் வெடிப்பு விபத்தை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சமயத்தில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கோவைக்கு சென்றுள்ளார். அங்கு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முக்கிய காவல் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.