தூத்துக்குடிதுப்பாக்கி சூடு குறித்து..!! ஆளுனரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை இரவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து விளக்கம் அளித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. போராட்டத்தின் 100-வது நாளான நேற்று (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. இன்று 2-வது நாளாகவும் வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 12 பேர் பலியானார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி. மகேந்திரன் ஆகியோரை இன்று மாலையில் அங்கிருந்து பணி மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நிலவரம் தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் ஏற்கனவே இரங்கல் அறிக்கை விட்டிருந்தார். அவர் தனது உதகை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (மே 23) இரவில் சென்னை திரும்பினார். இரவு 9.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார், போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகைக்கு சென்று பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர்.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த நேர்ந்த சூழல் குறித்து ஆளுனரிடம் அவர்கள் விளக்கியதாக தெரிகிறது. ஏற்கனவே இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விவரங்களையும் தெரிவித்தனர்.
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல ஆளுனரிடம் மத்திய அரசு தகவல் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் முதல்வர், துணை முதல்வர், டிஜிபி ஆகியோர் ஆளுனரை சந்தித்து நிலவரத்தை தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.
ஆளுனரே தூத்துக்குடி செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே காவிரிப் போராட்டம் நடந்த தருணத்திலும் இதே போன்று ஆளுனரை சந்தித்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் விளக்கம் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்