தூத்துக்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டு உள்ளார் : ராகுல்காந்தி..!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்விவகாரத்தில் போலீஸ் மற்றும் அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் கண்டணம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது அரச பயங்கரவாதம் என ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் 9 பேர் கொல்லப்பட்டது, அரசு ஸ்பான்ஸர் செய்யும் பயங்கரவாதத்தின் கொடூரமான உதாரணமாகும். அநீதிக்காக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். என்னுடைய எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பற்றியே உள்ளது,” என ராகுல் காந்தி டுவிட்டரில் குறிப்பிட்டார்.
“தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” எனவும் குறிப்பிட்டார். தூத்துக்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல்காந்தி திட்டமிட்டு உள்ளார். தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விலக்கப்பட்ட பின், ராகுல் தூத்துக்குடி வருவார் என காங்கிரஸ் கட்சி தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.