கர்நாடகாவின், 24 ஆவது முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் HD குமாரசாமி பதவியேற்றுள்ளார்..!

Default Image

கர்நாடகாவின், 24 ஆவது முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் HD குமாரசாமி பதவியேற்றுள்ளார். அம்மாநில துணை முதலமைச்சராக G.பரமேஸ்வரா பதவியேற்றுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான சவுதா வளாகத்தில், பதவியேற்பு விழா மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. கர்நாடகாவின் முதலமைச்சராக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் HD குமாரசாமிக்கு, ஆளுநர் வஜூபாய் வாலா, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநில துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரா பதவியேற்றார்.

இந்த பதவியேற்பு விழாவில், குமாரசாமியின் தந்தையும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவேகவுடா, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் தவிர, லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் ஹசன் மாவட்டத்தில் பிறந்தவர் குமாரசாமி.. பி.எஸ்.சி பட்டதாரியான அவர், அரசியலை விட சினிமா துறையையே அதிகம் விரும்பினார். பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்த குமாரசாமி, 1996ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு, எம்.பியானார். இதனைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த குமாரசாமி, 2006ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். 2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, இரண்டாவது முறையாக எம்.பியான குமாரசாமி, பின்னர், 2013ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்று, எதிர்க்கட்சி தலைவரானார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற குமாரசாமி, 2ஆவது முறையாக, கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்