தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் : வணிகர் சங்க பேரவை
இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து நாளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது .
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து நாளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு பலரை கொன்றதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.