காவல்துறையினர் எங்களை ஆடு, மாடுகளை போல நடத்தினர் – ஜெயக்குமார்
சட்டமன்றத்தைப் பொறுத்தவரை அது திமுகவின் அறிவாலயமாக மாறிவிட்டது என ஜெயக்குமார் பேட்டி.
சட்டசபையில் அதிமுகவின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக கூறி, இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தனர். அதற்கு இபிஎஸ் தரப்பில் இருந்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
இருப்பினும் தடையை மீறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தியதால், இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களை காவல்துறையினர் கைது செய்தனர். காலை கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல் துறையினர் மாலை விடுவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், உண்ணாவிரதம் இருப்பது சட்டவிரோதமான செயலா? அறப்போராட்டத்தை தான் கடைபிடிக்க வேண்டும் என்று நேற்று எழுதிக் கொடுத்தோம். அதற்கு அனுமதி கொடுத்துவிட்டு போயிருக்கலாம்.
இன்று காலை போலீசார் எங்களை ஆடு, மாடுகளை போல நடத்தினர். சட்டமன்றத்தைப் பொறுத்தவரை அது திமுகவின் அறிவாலயமாக மாறிவிட்டது. அங்கு ஸ்டாலின், உதயநிதி புகழ் பாடுவோருக்குத்தான் இடம். ஓட்டுப்போட்ட மக்களுக்கு வயிறு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.