தீபாவளிக்கு அசத்தலான அதிரசம் செய்வது எப்படி..? வாங்க பார்க்கலாம்..!
தீபாவளி பண்டிகைக்கு சுவையான அதிரசம் செய்யும் முறை.
பண்டிகை நாட்கள் என்றாலே நமது வீடுகளில் வகைவகையான பலகாரங்களை செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், என்ன பலகாரம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தற்போது இந்த பதிவில் அசத்தலான மொறு மொறு என அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 2 கப்
- வெல்லம் – 2 கப்
- நெய் – ஒரு ஸ்பூன்
- ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசியை நன்கு கழுவி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரைமணி நேரத்துக்கு பின் வீட்டில் உள்ள மின்விசிறியின் முன் துணியில் அரிசியை பரப்பி காய விட வேண்டும்.
ஈரம் வற்றியதும் மிக்ஸியில் மைய அரைக்கவும். முழுவதையும் அறைத்து பின் சல்லடையை கொண்டு சலித்து மிஞ்சும் மாவு கட்டிகளை தனியாக எடுத்து விட வேண்டும். அடுத்தபடியாக வெல்லத்தை உடைத்து பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி உருக வைக்க வேண்டும்.
வெல்லம் நன்கு கொதித்த பின், சரியான வெல்லப்பாகு பதம் வந்த பின், தயாரான பாகுடன், சலித்து வைத்துள்ள அரிசி மாவை கொட்டி கட்டி படாதவாறு பதமாக கிளற வேண்டும். பின் அதனுடன் ஏலக்காய் பொடியை சேர்த்து நெய் ஊற்றி நன்கு கிளற வேண்டும். மாவு சற்று இளகிய பதத்தில் இருக்குமாறு கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த மாவை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி துணியால் பாத்திரத்தின் வாயை கட்டிவிட வேண்டும். மாவு இரண்டு நாட்கள் ஊறின பின்பு தான் அதிரசத்தை செய்ய வேண்டும் அப்போதுதான் அதிரசம் மிருதுவாக நன்றாக வரும்.
இரண்டு நாட்கள் கழித்து மாவை எடுத்து பார்க்கும் போது, சற்று இறுக்கமாக இருக்கும். பின் அதை கையில் நெய் தடவிக் கொண்டு மீண்டும் பிசைந்தாள் பழைய நிலைக்கு வந்து விடும். அதன் பின் எண்ணெயை காய்ச்சி, வாழை இலையில் அதிரசத்தை தட்டி, எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான அதிரசம் தயார்.