மாணவர்களே உங்களுடைய எதிர்காலம் ஆபத்தில் உள்ளது, மாணவர்களே எழுந்திருங்கள் : ராகுல் காந்தி..!
யுபிஎஸ்சி தேர்வில் தேர்வாகி 100 நாள் பயிற்சிக்கு செல்பவர்கள் அங்கு நடக்கும் பயிற்சியில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள் என்று புதிய விதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேர்வு செய்பவர்களை மத்தியில் அதிகாரிகளாக நியமிக்க மோடி விரும்புகிறார் என விமர்சனம் செய்து உள்ளார். மாணவர்களே உங்களுடைய எதிர்காலம் ஆபத்தில் உள்ளது, மாணவர்களே எழுந்திருங்கள் என அழைப்பு விடுத்து உள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “மாணவர்களே எழுந்திருங்கள், உங்களுடைய எதிர்காலம் ஆபத்தில் உள்ளது! உங்களுடைய உரிமைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்கிறது.
ஆர்எஸ்எஸ் விருப்பத்தின் அடிப்படையில் மத்திய அரசு பணிகளுக்கு அதிகாரிகளை நியமிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக ரேங்க், மெரிட் விதிமுறைகளில் திருத்தம் செய்து, பயிற்சி அடிப்படையில் நியமிக்கப் போகிறார்கள்” என கூறிஉள்ளார். இதற்கான பிரதம அலுவலக கடிதத்தையும் ராகுல் காந்தி இணைத்து உள்ளார். ராகுல் காந்தி #ByeByeUPSC என்ற ஹேஷ் டேக்கை இணைத்து உள்ளார்.