#WomensAsiaCup: முதல் அரையிறுதிப்போட்டியில் வென்று, இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா!.
மகளிர் ஆசியக்கோப்பையின் முதல் அரையிறுதிப்போட்டியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
வங்கதேசத்தில் நடந்து வரும் மகளிர் ஆசியக்கோப்பை போட்டியின் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஷெபாலி வர்மா(42), ஹர்மன்ப்ரீத் கவுர்(36) மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்(27) ஆகியோர் உதவியுடன் 20ஓவர்கள் முடிவில் 148/6 ரன்கள் குவித்தது. தாய்லாந்து அணியில் சொர்னரின் டிப்போச் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 74 ரன்களுக்குள் 9 விக்கெட்களை இழந்தது. இதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்தது. இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்களும், ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்களும் சாய்த்தனர். ஷெபாலி வர்மா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.