ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், 10,000 ரூபாய் முன்பணம்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்!
தீபாவளி போனஸ் வழங்குவதில் தேவையற்ற தாமதம் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடபட உள்ளது. தீபாவளி பண்டிகையை யொட்டி அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் புதுச்சேரியில் குருப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு ரூ.6,908, முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184 போனஸ் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.
ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ், அகவிலைப்படி குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தீபாவளி போனஸ் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ், ரூ.10,000 முன்பணம் ஆகியவற்றை வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
இதில் தேவையற்ற தாமதம் கூடாது. தீபாவளிக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. போனஸ் மற்றும் முன்பணத் தொகை மூலம் தான் தீபாவளிக்கு புத்தாடை உள்ளிட்ட பொருட்களை தொழிலாளர்களால் வாங்க முடியும். இந்த அவசியத்தையும், அவசரத்தையும் தமிழக அரசு உணர வேண்டும். மேலும், தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி குறைந்தபட்சம் 25% போனஸ் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்க அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.