கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் – விஜயகாந்தஅறிக்கை – கேப்டன் விஜயகாந்த்
தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்ற வேண்டும் என விஜயகாந்த் வேண்டுகோள்.
தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி, மக்கள் பாதுகாப்பாக பயணிக்க புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் இருக்கை கழன்றதால் அதில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பேருந்தில் இருந்து வெளியே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பேருந்துகளில் படிக்கட்டுகள், ஜன்னல் கம்பிகள், இருக்கைகள், மேற்கூரைகள் பழுதான நிலையில் காணப்படுகின்றன. அரசு பேருந்துகள் பராமரிப்பு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
கன்னியாகுமரியில் காலாவதியான அரசு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. பழுதடைந்த பேருந்துகளை உடனடியாக திரும்ப பெற்று. தற்போது புதிதாக வாங்க உள்ள அரசு பேருந்துகளை முன்னுரிமை அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.