ஐநாவில் ரகசிய வாக்கெடுப்பு விவகாரம்.! ரஷ்யாவுக்கு எதிரான வாக்களித்த இந்தியா.!
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இந்த வாரம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த ரஷ்யா கோரிக்கை வைத்த நிலையில், அதனை எதிர்த்து இந்தியா வெளிப்படையான வாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பிறகு ரஷ்யா தற்போது உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அண்மையில் உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து ஐநாவில் இந்த வாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்த வாக்கெடுப்பை வெளிப்படையாக நடத்தக்கூடாது. ரகசியமாக நடத்தவேண்டும் என ரஷ்யா , ஐநாவிடம் கோரிக்கை வைத்தது. இதுகுறித்தான வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 107 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக அதாவது, வெளிப்படையான வாக்கெடுப்பு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.
13 நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக, அதாவது , ரகசிய வாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்துள்ளனர். 39 நாடுகள் நடுநிலையாக நின்றுவிட்டனர். ரஷ்யாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது சரவதேச அரசியலில் மிக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.