தாய்மொழி உணர்வை உரசி பார்க்க வேண்டாம்.. மொழிப்போரை திணிக்காதீர்கள்.! முதல்வர் கண்டனம்.!

Default Image

எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம் என  இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சிக்கு முதலமைச்சர் கண்டனம்.

கட்டாய இந்தியை புகுத்தி மத்திய அரசு இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு ஒரே நாடு என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்படுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்க கூடியதாகும்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு கடந்த மாதம் அளித்துள்ள அறிக்கையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவற்றிலும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் எனவும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்யவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தி பேசும் மாநிலங்கள் எனும் A பிரிவு மாநிலங்களில் இதனை முழுமையாக செயல்படுத்தி, ஓரளவு இந்தி பேசும் மாநிலங்களிலும் இதனைத் தொடர்வதுடன், இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பொது மொழியாக்கிட வேண்டும் என்கிற பரிந்துரையும் இதில் அடங்கியுள்ளது. இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தும் உரிமையை கொண்ட சம மொழிகள். இன்னும் சில மொழிகளையும் இந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் என அந்தந்த மொழிகளைப் பேசுவோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தி மொழியை மட்டும் பொது மொழியாக்க அமித் ஷா அவர்களின் தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ அவசியமோ எங்கிருந்து வந்தது? மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருப்பது ஏன்? பாரத் மாதா கீ ஜே என்று நாடாளுமன்ற அவையில் அதனை ஒரு அரசியல் கோஷமாக்கிக் குரல் எழுப்பிக் கொண்டே, இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது. இந்திய ஒன்றியத்தில் இந்தி பேசுகிற மக்களின் எண்ணிக்கையைவிட, மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய சிறப்பு இருக்கிறது. தனித்துவம் இருக்கிறது. மொழிவழிப் பண்பாடு இருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள மத்திய அரசின் கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் தொடங்கி மாணவர்கள் வரை இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம். இந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்பது போலவும், மற்ற மொழிகளைப் பேசுவோர் இரண்டாந்தர குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது.

இதனை தமிழ்நாடு மட்டுமல்ல, எங்களின் அண்டை மாநிலங்கள் உள்பட அவரவர் தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்தவரும் ஏற்க மாட்டார்கள். இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இதை கைவிட்டு இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என பிரதமர் அவர்கள் தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்