பஞ்சாப் அரசவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.! முதல்வர் பக்வந்த் மான் வெற்றி.!
நேற்று ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் சட்டமன்றத்தில் முதல்வர் பக்வந்த் மான் தலைமையிலான அரசு தங்களது 92 எம்.எல்.ஏக்கள் மூலம் தங்கள் பெரும்பான்மையினை நிரூபித்தார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கிறது. பக்வந்த் மான் அம்மாநில முதல்வர் பதவியில் இருக்கிறார். அம்மாநிலத்தில், பாஜக ‘ஆபரேஷன் தாமரை’ எனும் பெயரில் எம்.எல்.ஏக்களை விலை பேசுகிறது. ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆம் ஆத்மி முன்வைத்தது.
மேலும், இது குறித்து, பஞ்சாப் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று பஞ்சாப் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 92 பேரும் பக்வந்த் மான் அரசுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இதன் மூலம் முதல்வர் பக்வந்த் மான் தலைமையிலான அரசு பெரும்பான்மை நிரூபித்து விட்டது.
இந்த வாக்கெடுப்பை சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் நடத்தி வைத்தார். எம்.எல்.ஏ.க்களிடம் கைகளை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டார், நம்பிக்கைத் தீர்மானத்திற்கு எதிராக இருப்பவர்களிடமும் கைகளை உயர்த்துமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. என்று சபாநாயகர் கூறினார்.