இப்படி சொதப்பினால் உலகக்கோப்பையில் மூட்டையை கட்டவேண்டியதான்- அக்தர்
இப்படி விளையாடினால் டி-20 உலகக்கோப்பையில் முதல் சுற்றில் கூட வெற்றி பெறமுடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர், அந்த அணி வீரர்களை எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி 7 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3-3 என்ற சமநிலையில், நேற்று நடந்த 7 ஆவது போட்டியில் 67 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரையும் 4-3 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று நடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் அதன் பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை, பெருமபாலும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகினர். இதனால் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியுற்றது.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது “இப்படி விளையாடினால் டி-20 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறிவிடும்”. மிடில் ஆர்டர் வீரர்கள் பேட்டிங் நன்றாக விளையாடவில்லை என்றும், பின் வரிசை வீரர்கள் வரை பேட்டிங்கில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் அவர் பாக். வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடாவிட்டால் மிடில் ஆர்டரும் சொதப்பி விடுகிறது. பாகிஸ்தான் வெற்றி பெறுவதையே நான் எப்போதும் விரும்புகிறேன், அவர்கள் தோற்பது மனதுக்கு வலிக்கிறது. விரைவில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் பலப்படுத்தி விடும் என்று நம்புகிறேன் என அக்தர் மேலும் கூறியுள்ளார்.