காங்கிரஸ் தலைவர் தேர்தல்.! சொந்த மாநிலத்திலேயே ஆதரவு இழக்கும் சசிதரூர்.?
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் கேரள காங்கிரஸ் எம்.பி சசிதரூர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும். வரும் 8ஆம் தேதிக்குள் இவர்களில் ஒருவர் வாபஸ் பெற்றால் மற்றொருவர் போட்டியின்றி காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதில், காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி என நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் கார்கே. ஆனால், காங்கிரசிற்கு நிரந்தர தலைமை வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய ஜி23 குழுவில் ஒருவராக இருந்தவர் சசிதரூர்.
மேலும், காங்கிரஸ் கட்சி கேரளாவில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும், சசிதரூர் கேரளாவில் 2009ஆம் ஆண்டு முதல் திருவனநாதபுரம் எம்பியாக தொடர்ந்து 3 முறை ஜெயித்து இருந்தாலும், ஆளும் பினராயி விஜயன் நல்லது செய்தாலோ, மத்திய அரசு நல்லது செய்தாலோ உடனே நாம் எதிர்க்கட்சி என்பதை மறந்து பாராட்டி விடுவாராம்.
அதனால், காங்கிரஸ் தலைவராக சசிதரூர் நியமிக்கப்பட்டால், வீரியமிக்க எதிர்க்கட்சி தலைவராக செயல்பட மாட்டார் என காங்கிரஸார் மத்தியில் எழுந்துள்ளதாம். மேலும், இவரது சொந்த மாநிலமான கேரளாவில் கூட இவர் காங்கிரஸ் தலைவராவதற்கு எதிரான குரல்களே எழுந்து வருகிறது என கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் வரும் காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் யார் தலைவர் என்கிற முடிவு தெரிந்துவிடும்.