#T20WorldCup2022: உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!

Default Image

உலக கோப்பைக்கு ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக சுமார் 45 கோடியே 57 லட்சம் ரூபாயை ஐசிசி அறிவித்துள்ளது.

2022 ஐசிசி ஆடவர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 16 அணிகள் பங்கேற்று விளையாடும் உலக கோப்பை தொடரின் முதல் சுற்றில் ஏ பிரிவில் உள்ள நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மற்றும் பி பிரிவில் மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

இந்த இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் குரூப் சுற்றுக்கு முன்னேறும். இதன்பின், சூப்பர் 12 சுற்று ஏ மற்றும் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம்பெறும். இரண்டு சுற்றிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2022 டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு $1.6 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் 13,04,90,640) பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 6 கோடியே 50 லட்சம் ரூபாயும், அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேறும் அணிகளுக்கு தலா 3 கோடியே 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 12 சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஒட்டுமொத்தமாக 9 கோடியே 77 லட்சம் ரூபாயும், சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ஒட்டுமொத்தமாக 4 கோடியே 56 லட்சம் ரூபாயும், முதல் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு 3 கோடியே 90 லட்சமும், முதல் சுற்றில் வெளியேறும் அணிகளுக்கு 1 கோடியே 30 லட்சம் வழங்கப்பட உள்ளது.

இந்த தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக சுமார் 45 கோடியே 57 லட்சம் ரூபாயை சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐசிசி) அறிவித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, சூப்பர் 12 கட்டத்தில் 30 ஆட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு வெற்றி $40,000 அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு தோரயமானது.  இதனிடையே ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் சூப்பர் 12 கட்டத்திற்கு நேரடியாகச் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்