#JustNow: திமுக தலைவர் தேர்தல் – அக்.7ல் வேட்பு மனு அளிக்கலாம்!
திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளிக்கலாம் என அறிவிப்பு.
திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட அக்டோபர் 7-ஆம் தேதி வேட்புமனு அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. அதன்படி, மாவட்ட செயலாளர், அவைத் தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப். 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதன்பின் திமுக சார்பில் 15வது பொதுத்தேர்தல் தொடர்பான பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டிருந்தார். திமுகவின் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியானது. 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட அக்டோபர் 7-ஆம் தேதி வேட்புமனு அளிக்கலாம் என்றும் வேட்பு மனுக் கட்டணமாக ரூ.50,000 செலுத்த வேண்டும் எனவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடைய, அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை தேர்தெடுப்பதற்கு பொதுக்குழு கூடுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.
“09-10-2022 அன்று நடைபெறும் புதிய பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்”
– தலைமைக் கழகம் அறிவிப்பு#DMK pic.twitter.com/13MrlUzIyn
— DMK (@arivalayam) September 30, 2022