#JustNow: போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறை துவக்கம்!

Default Image

போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை துவக்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பத்திரப்பதிவு துறையில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போலி பத்திரப்பதிவால் சென்னை அமைந்தகரையில் உள்ள நிலத்தை இழந்த நடிகை வாணிஸ்ரீக்கு நிலம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை புதிய சட்டம் மூலம் மீட்டு வாணிஸ்ரீயிடம் ஒப்படைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். நிலத்தை மீட்டு தந்த முதலமைச்சருக்கு வாணிஸ்ரீ நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம், பதிவாளரே போலி பதிவுகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை ரத்து செய்ய முடியும். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த சட்டத்துக்கு சமீபத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டம் மூலம் பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்துதல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம். இதற்கு மேல் பதிவுத்துறை தலைவரால் உத்தரவு வழங்கப் பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்மந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கிடவும் சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நில அபகரிப்பு மோசடியாளர்களால் பாதிக்கப்பட்ட, சொத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு அச்சொத்தினை மீட்டெடுத்துக் கொடுக்கும் வகையில், மோசடி ஆவணப்பதிவுகளை மாவட்டப் பதிவாளர் இரத்து செய்திட பதிவுச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், போலி ஆவணங்கள் பதிவினை அறவே ஒழிக்க சட்டத்தின் துணையோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை நல்ல நாட்கள் எனக் கருதப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். இந்நாட்களில் அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களில் டோக்கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அன்றே ஆவணம் பதியப்பட வேண்டும் என விரும்புபவர்கள் tnreginet.gov.in என்ற இணையவழியாக ரூ.5,000/- செலுத்தி உடனடி (தட்கல்) டோக்கன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர ஆவணப்பதிவு தேவைப்படும் நிகழ்வுகளிலும் இவ்வசதியைப் பயன்படுத்தி உடன் டோக்கன் பெறலாம்.
இந்த உடனடி (தட்கல்) டோக்கன் வசதி, அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்