திமுக உட்கட்சி தேர்தல் – அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல்!
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. திமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிட அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். மாவட்ட செயலாளர்கள் பொறுப்புக்கு தங்கம் தென்னரசு, கீதாஜீவன், சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவைத் தலைவர், மாவட்ட செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இன்று முதல் வருகிற 25-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது. அதன்படி, வரும் 25ஆம் தேதி வரை திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். இன்று கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு நெல்லை கிழக்கு, மத்தி மாவட்ட நிர்வாகிகள் மனு பெறலாம் என்றும் நாளை நீலகிரி, ஈரோடு வடக்கு தெற்கு, திருப்பூர் வடக்கு தெற்கு உள்ளிட்ட மாவட்ட திமுகவினர் கட்டணம் செலுத்தி மனு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுக உட்கட்சி தேர்தல் – திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்பு மனு தாக்கல் செய்தார்.